நீட் நுழைவுத் தேர்வை நீக்க வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு போராட்டம் நடத்தியதை போல மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தில், நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழியின் வீட்டில், அவரது படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், இன்று அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதன்பிறகு, செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
2017ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் என்பது காளையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காட்சிப் பட்டியலில் சேர்த்ததால், தமிழகத்தில் பாஜக ஆட்சி காலத்தில், ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நடந்த தன்னெழுச்சி போராட்டமாகும். இந்த போராட்டம், மெரீனாப் புரட்சி என்ற சிறப்பு பெயராலும் அழைக்கப்படுகிறது. அரசியல் கட்சித்தலைமைகளின் முனைப்புகள் ஏதுமின்றி, குறிப்பிடத்தக்க தலைமை அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூகவலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர். அதேபோன்ற போராட்டம் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
























