புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் முறையாக நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்று நலத்திட்ட ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உட்பட அனைத்துத் துறைச் செயலாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்…
“கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்திருந்தோம். அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்னென்ன வாக்குறுதிகள் என்று பிரித்து வெளியிட்டிருக்கிறோம்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆளுநர் உரை தரப்பட்டிருக்கிறது, நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருக்கிறோம், வேளாண் நிதிநிலை அறிக்கை என்று புதிதாக தாக்கல் செய்து, அதையும் வெளியிட்டிருக்கிறோம், சட்டமன்றத்தில் துறைவாரியாக மானியக் கோரிக்கை விவாதத்தின்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறோம், சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம்.
இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்மிடம்தான் இருக்கிறது. அதைத்தான் ஐந்து மலைகளைத் தாண்டியாக வேண்டும் என்று நான் சொன்னேன். இந்த அறிவிப்புகள் அனைத்தையும் படிப்படியாக நாம் நிறைவேற்றியாக வேண்டும். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு அவசியம் தேவை. இந்த வாக்குறுதிகள், அறிவிப்புகள் அனைத்தும் அரசாணைகளாக வரவேண்டுமென்று சொன்னால், அதற்கு துறைகளின் செயலாளர்கள்தான் பொறுப்பேற்றுச் செயலாற்ற வேண்டும்.
நான் இந்த அறிவிப்புகள் செயல்படுத்துவது குறித்து அமைச்சர்களையும், ஒவ்வொரு துறைச் செயலாளர்களையும் கண்காணிப்பேன். கோவிட் பெருந்தொற்று காரணத்தினால் சில பொருளாதார நெருக்கடிகள் உள்ளது. இச்சூழ்நிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கக்கூடிய நிதியினை அந்தந்தத் திட்டப் பணிகளுக்கு முழுமையாகவும், முறையாகவும் செலவிடுவதன் மூலம் நம் பொருளாதாரத்துக்கு உங்கள் திறமையான செயல்பாடுகள் தக்க வகையில் ஊக்கமளிப்பதாக அமையும்.
ஆகவே, அனைத்துத் துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்த தகவல்களை நான் தெரிந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் “ஆன்லைன் தகவல் பலகை” ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் தகவல்களை நான் தினமும் பார்க்கப் போகிறேன். தகவல்களை அளிக்கும் வகையில்தான் “ஆன்லைன் தகவல் பலகை” ஏற்படுத்தப்படவிருக்கிறது. என்னுடைய அறையிலேயே பெரிய திரை ஒன்றினை வைத்து, தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு நடந்து வருகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
























