திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான மணிகண்டன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். இவர் அத்திரைப்படத்துக்கு அடுத்ததாக விஜய் சேதுபதி, ரித்திகா சிங்கை வைத்து ‘ஆண்டவன் கட்டளை’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். அதற்கடுத்தும் விஜய் சேதுபதியை வைத்து ‘கடைசி விவசாயி’ என்கிற திரைப்படத்தை இயக்கிய நிலையில் சில காரணங்களால் அத்திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக புதிய படமொன்றில் விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணி இணையவிருக்கிறது. கிராமத்துக் கதைக்களத்தில் இப்படம் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்துக்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. கூடிய விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























