தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும், ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்கிற வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், செம்மச்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்றும், இது போன்று தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினர். நீர் நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்கா விட்டால் நாம் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால், புத்தகங்களில் அதுகுறித்த வரலாற்றுப் பதிவு மட்டுமே எஞ்சும். ஆகவே, நீர்நிலைகளில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
























