நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் நிறுவி வழிபடப்பட்டு 3 நாட்கள் கழித்து ஊர்வலமாகச் சென்று சிலையை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் காரணமாக சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறை விநாயகர் சதுர்த்திக்கான கட்டுப்பாடுகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, விழா கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கூட்டமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபராகச் சென்று விநாயகர் சிலையை அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தனி நபராக எடுத்துச் சென்று அருகிலுள்ள ஆலயங்களில் வைத்து செல்லலாம் என்றும், அவ்வாறு வைத்துச் செல்லப்படும் சிலைகளை முறையாக கரைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்கு கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் முழுவதும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட இருப்பதாவும், கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
























