கண்ணுக்கு மை அழகு என்பார்கள். இன்றைக்கு மை மட்டுமல்லாமல் ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனங்கள் பலவற்றையும் உபயோகிக்கிறார்கள். இவற்றையெல்லாம் உபயோகிக்கும் நிறைய பேர் இரவு தூங்கும்போது ஐ மேக்கப்பை அகற்றாமலேயே தூங்குகின்றனர். இது மிகவும் தவறு.
மேல் இமை, கீழ் இமை இரண்டிலுமே நிறைய சுரப்பிகள் இருக்கின்றன. அவை தடையில்லாமல் சுரந்தால்தான் கண்ணின் இயக்கம் சரி வர இருக்கும். ஐ மேக்கப் போட்டு விட்டு அதை அகற்றாமல் அப்படியே தூங்குவதன் மூலம் அவை இந்த சுரப்பிகளை அடைத்து விடுகின்றன. இதனால் கண்ணீர் படலம் பாதிப்புக்குள்ளாகும். நீர்ப்பசை இல்லாமல் கண் வறட்சிக்குள்ளாகும். வறட்சி அதிகரிக்கும்போது கண் சிவந்து போகும். இதனால் கண் எரிச்சல் ஏற்படும். இது தொடர்ச்சியாக நடந்தால் கண்ணில் கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஐ மேக்கப் போடுவது தவறே இல்லை ஆனால் அதை தினந்தோறும் அகற்றி விட்டு தூங்கச் செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மேக்கப்பை தண்ணீரில் கழுவி மட்டும் அகற்ற முடியாது. ஏனென்றால் பெரும்பாலான சாதனங்கள் வாட்டர் ஃப்ரூஃப் ஆக இருக்கின்றன. இதனை அகற்றுவதற்கென க்ரீம்கள் இருக்கின்றன. அதனைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் தேங்காய் எண்ணெய் மூலம் அகற்றலாம். ஐ மேக்கப் சாதனங்கள் தரமானதாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும். தரமற்ற சாதனங்களை பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏற்படலாம். தொடர்ச்சியாக ஐ மேக்கப் போட்டு வருபவர்களுக்கு அது கண்ணில் தேங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அழகு முக்கியம்தான் அதே சமயம் அது ஆபத்தில் முடிந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
























