இலக்கியத்துக்கென இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் சாகித்ய அகாதெமி முதன்மையானது. ஒவ்வொரு ஆண்டும் 18 இந்திய மொழி இலக்கியங்களில் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே 35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளுக்காக யுவ புரஸ்கார் விருதும், சிறார் இலக்கியத்துக்கென ‘பால புரஸ்கார்’ என்கிற விருதும் வழங்கப்படுகிறது.
அவ்வரிசையில் இந்த ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்கிற நூலுக்காக எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி தொடர்ச்சியாக சிறார் இலக்கியத்துக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறவர். அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
























