ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டு சூடானில் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்துக்கு அரசு எண்ணெய் நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1956- ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற சூடான், பல ராணுவப் புரட்சிகளை சந்தித்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு சூடான். தற்போதைய பிரதமாக அப்துல்லா ஹம்டோ இருந்து வந்தார். அவரது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அரசியல் கட்சிகள் இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ”நாட்டில் உள்நாட்டுப் போரை’ தடுக்கவே ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக, சூடானின் ஆயுதப் படைத் தலைவரும் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் உள்ளவருமான ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், கூறியுள்ளார். புர்ஹானின் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதமர் அப்தல்லா ஹம்டோக் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்நாட்டு மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் வரை பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
அரசு எண்ணெய் நிறுவன ஊழியர்கள், தாங்களும் ஒத்துழையாமை போராட்டத்தில், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். ஒத்துழையாமை போராட்டத்திற்கு மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
























