முல்லைப் பெரியாறு அணை குறித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ப்ரித்விராஜ் பதிவிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதன் காரணமாக அவரது உருவப்படத்தை எரித்துப் போராட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரித்விராஜ் தமிழில் மொழி, கனா கண்டேன்,ராவணன் உள்ளிட்ட தமிழ்படங்களிலும் நடித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உண்மை மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இந்த 125 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை செயல்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. நமது அரசியல் பொருளாதார காரணங்களை தள்ளி வைத்துவிட்டு எது சரியோ அதனை செய்ய வேண்டும்’ என்று ட்வீட் செய்துள்ளார்.
ப்ரித்விராஜின் இந்த ட்வீட்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் மட்டுமின்றி வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவரும், மருத்துவர் ஜோசஃப் என்பவரும் அணை பலவீனமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் , தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முல்லை பெரியாறு அணை குறித்து தவறான கருத்து தெரிவிப்பதாகக் கூறி நடிகர் ப்ரித்விராஜ், வழக்கறிஞர் ரசூல் ஜோய், மருத்துவர் ஜோசஃப் ஆகியோரின் உருவப் படத்தை எரித்தனர்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தமிழக – கேரள மக்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தி வருகையில் இது போன்ற கருத்துகள் மேலும் உக்கிரப்படுத்துபவையாக இருக்கின்றன.
























