தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 31-ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை செய்வதற்கான கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பள்ளிகள் திறப்பு, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள், வடகிழக்கு பருவமழை காலம் ஆகிய நிகழ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நேற்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்..
தடுப்பூசி செலுத்தும் பணி…
தமிழ்நாட்டில், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வருகிற, 31-ந்தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
பண்டிகை காலங்களில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்று நிலையினை கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தவும், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
நவம்பர் 15-ந்தேதி வரை நீட்டிப்பு…
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-11-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நேரக்கட்டுப்பாடு தளர்வு…
பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் இன்று (நேற்று) முதல் தளர்த்தப்படுகிறது.
அதேபோன்று, அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.
தியேட்டர்களில் 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி…
மேலும், பின்வரும் செயல்பாடுகளுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது, அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.
சினிமா தியேட்டர்கள் 100 சதவீதம் ரசிகர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் (பார்கள்) அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பஸ்களிலும்100 சதவீத இருக்கை…
மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பஸ் போக்குவரத்து, 100 சதவீதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
திருவிழாவுக்கு தொடர்ந்து தடை…
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.
முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கை…
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டங்களில், வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பின், அங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அதாவது, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
விதிமீறலுக்கு அபராதம்…
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த்தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் பண்டிகை மற்றும் சமுதாய நிகழ்வுகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து நிறுவனங்களும் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.
























