பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 8 லட்சம் தொழிலாளர்களுக்காக பட்டாசு விற்பனைக்கான விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டி பரிசீலனை மேற்கொள்ளுங்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சூழலியல் நோக்கோடு காற்று மாசுபாடு காரணமாக தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “கொரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலை நம்பி 8 லட்சம் பேர் உள்ளனர். காற்று மாசு காரணமாக தங்கள் மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்கிறேன். இருப்பினும், உச்சநீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட, சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ள நிலையில் பட்டாசு உற்பத்தியில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வரின் இக்கடிதம் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
























