ஒரேநாளில் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில், ஆந்திரா- ஒடிசாவை நோக்கி செல்லும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தமான் – நிக்கோபர் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஒடிசாவிலும் கனமழை பெய்யக் கூடுமென்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், கர்நாடக மாநில கடலோர பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சியின் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
ஒரே நாளில் உருவாகியுள்ள இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக இந்திய நிலப்பரப்பில் தெற்கு தீபகற்ப பகுதியில் உள்ள மாநிலங்களில் அடுத்த 5 தினங்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கர்நாடகா, கடலோர கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை முதல் மிதமான மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
























