டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனைகள் தனலட்சுமி மற்றும் சுபா ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. அதன் ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றனர். ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான பிறகு திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார் “என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கியதன் விளைவாகத்தான் இந்நிலையை எட்ட முடிந்தது. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெற்று இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்துவேன். தமிழக அரசு எனக்கு ஒரு வேலை வழங்கினால் உபயோகமாக இருக்கும். ஒரு போட்டிக்குச் சென்றால் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். எனக்கு வேலை கிடைத்தால் எனக்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்வேன்” என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தனலட்சுமி, சுபா ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணைகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். விளையாட்டு வீரர்களை இப்படியாக ஊக்குவிப்பதன் மூலம் பல திறமையாளர்கள் உருவாகுவார்கள் என பலரும் இதனை வரவேற்றுள்ளனர்.
























