ஊராட்சித் தலைவர் பதவியை பொதுப்பிரிவுக்கு மாற்ற வேண்டிய தங்களது நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட அம்முண்டி ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி ஊராட்சியில் மொத்தம் 2,049 வாக்காளர்கள் உள்ளனர். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த ஊராட்சி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஊராட்சிக்குட்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்கள் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர் என்றும், அவர்களும் கலப்பு மணம் செய்தவர்கள் என்பதால் போட்டியிட முடியாது என்பதாலும் இந்த ஊராட்சியை பொதுப்பிரிவுக்கு மாற்றக்கோரி ஏற்கனவே இம்மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இவர்கள் கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அம்மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டதுடன், அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், ஊராட்சியிலுள்ள 9 வார்டுகளின் உறுப்பினர் பதவிகளுக்கும் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மேலும், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கும் வாக்களிக்கப் போவதில்லை என இந்த ஊராட்சி மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு அம்முண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி மக்கள் யாரும் வாக்களிக்க செல்லாததால் இந்த 5 வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தாங்கள் வாக்களிக்கப் போவதில்லை என அம்முண்டி ஊராட்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.
























