நடிகர் அஜித் வீட்டு முன்பு பெண் மருத்துவ உதவியாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீக்குளிக்க முயன்ற அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தவர் பர்ஷானா. கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு நடிகர் அஜித்குமார் வருகை தந்தார். பர்ஷானா அவரை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதி வேகமாகப் பரவியதை அடுத்து அஜித் சார்பில் மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பர்ஷானாவை அப்போலோ நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. தான் வீடியோ எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டும் மருத்துவமனை நிர்வாகம் அவரை வேலையில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தனக்கு பணி கிடைக்க வாய்ப்பளிக்குமாறு நடிகர் அஜித்திடம் கோரிக்கை வைக்க முடிவு செய்த பர்ஷானா கடந்த ஓராண்டாக அஜித்தை சந்திக்க முயற்சி செய்து வருகிறார்.
எவ்வளவு முயன்றும் அஜித்தை சந்திக்க முடியாததால் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அவரை தடுத்து கைது செய்தனர். எதுவாக இருந்தாலும் சட்டப்படி புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அவரிடம் கூறியிள்ளனர். அதற்கு பர்ஷானா “நடிகர் அஜித்தால் எனது வாழ்க்கையே பறிபோய் விட்டது. அவர் போட்ட மெயிலால்தான் எனது வேலை பறிபோனது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடிகர் அஜித்தை பார்க்காமல் இங்கு இருந்து செல்ல மாட்டேன். நான் சாக முடிவெடுத்ததற்கு அவரே காரணம்” என்று கூறியுள்ளார்.
























