ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். ரஜினி நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த ‘தர்பார்’ படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அஜித்தை வைத்து வீரம், விஸ்வாசம் போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்த சிறுத்தை சிவாவுடன் ரஜினி இணையும்போதே படம் பெரிய வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல் வெளியானது. இமான் இசையமைப்பில் விவேகா எழுதியுள்ள இப்பாடல் படத்தின் தொடக்கப்பாடலாக அமையக்கூடியது. ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு பாடலை பகிர்ந்து வருகின்றனர். சிவா – இமான் கூட்டணி பெயர் பெற்றது. விஸ்வாசம் படத்துக்காக இமான் தேசிய விருது பெற்றார். அதற்கடுத்து அவர்கள் இணைந்துள்ள படம் என்பதால் இப்படத்திலும் அதகளம் பண்ணியிருப்பார் என்கிற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
























