புரதச் சத்து மிகுந்துள்ள உணவுகளில் முதன்மையானது கோழி முட்டை. இதை நாம் சொல்லவில்லை. உலக சுகாதார மையமே சொல்கிறது. 1996-ஆம் ஆண்டுமுதல் வருடந்தோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை [அக்டோபர் 8] அன்று நித்தம் ஒரு முட்டை சாப்பிடுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டையின் நன்மைகள், சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதிகமான புரதச் சத்துள்ள முட்டை மற்ற உணவுப் பொருட்களை விட விலையில் மிகக் குறைவானது. பல நூற்றாண்டு காலமாக உலகம் முழுதும் உணவாக உட்கொள்ளப் படுகிறது முட்டை. நமது உடலின் தலைமைச் செயலகமான மூளை சுறுசுறுப்பாக இயங்கவும்; தசை நார்களின் வளர்ச்சி, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு ஆற்றல், பார்வைத்திறன் மேம்பாடு, ஆகியவற்றுக்கும் முட்டை மிகச் சிறந்த உணவு என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வைட்டமின்கள் ஏ, ஈ, பி 12, பி 5 போன்றவைகளும், கோலைன், அமினோ அமிலம், இதயத்திற்கு இன்றியமையாத ஒமேகா-3 கொழுப்பு அமிலம், புரதச் சத்து, உள்ளிட்ட மனித உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச் சத்துகளும் நாம் உண்ணும் முட்டையில் நிரம்ப உள்ளது. வளரும் குழந்தைகள் தினந்தோறும் ஒரு முட்டையாவது சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
























