துருக்கி நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகை சன்னி லியோன் தனது வருவாயில் ஒரு பங்கை அம்மக்களுக்கு அளிக்க முன்வந்து நெகிழவைத்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 40,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகியிருந்த இந்நிலநடுக்கம் அந்நட்டின் பெரும்பகுதியை உருக்குலைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ளது.
இதனால் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடைமைகளையும் வீடுகளையும் இழந்து நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு உலக நாடுகள் பலவும் தங்கள் உதவிக்கரத்தை நீட்டிவருகின்றன.
இந்நிலையில் பிரபல நடிகை சன்னி லியோன் அவரது கணவர் டேனியல் வெபருடன் இணைந்து துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவர் தன்னுடைய ”StarStrucks Cosmetics” என்ற ஒப்பனை நிறுவனத்தின் பிப்ரவரி மாத வருவாயிலிருந்து 10% வருவாயை துருக்கி மக்களுக்கு உதவியாக வழங்க முடிவுசெய்துள்ளார்.
மேலும் அவர் உலகம் முழுவதும் உள்ள மக்கள், துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கவேண்டியும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க தங்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவவேண்டியும் கேட்டுக்கொண்டுள்ளார். இவரது இச்செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


























