ஈரோடு தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலினை ’மீசை வைத்த ஆண்மகனா’ என்று கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி தரும் விதமாக பரப்புரையில் கனிமொழி எம்.பி. கடுமையாகப் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுடன் பரப்புரை மேற்கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்தந்த கட்சிகள் தத்தமது உத்திகளைப் பயன்படுத்தி பொதுமக்களைக் கவர்ந்து வாக்குசேகரித்து வருகின்றன.
இந்நிலையில் அதிமுக சார்பில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அண்மையில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்த சமயம், முதல்வர் ஸ்டாலின் குறித்து, “உங்களுக்கு எங்களைக் கண்டு தோல்வி பயம். மக்களுக்கு ரூ.2000 பணம் கொடுத்து கொட்டகையில் ஆளுங்கட்சியினர் அடைத்துவைத்துள்ளனர். ஒரு முதல்வரே தேர்தல் விதியை மீறலாமா? தனக்கு செல்வாக்கு உள்ளதாகக் கூறும் ஸ்டாலின் எதற்காக மக்களை அடைத்து வைக்கவேண்டும். உங்களுக்கு ஆண்மையிருந்தால், மீசை வைத்திருப்பது, வேட்டி கட்டுவது உண்மையாக இருந்தால் மக்களை நேருக்கு நேராகச் சந்தியுங்கள்” என்று கடுமையாக சாடியிருந்தார்.
இதனிடையே, இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு சம்பத் நகரில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சமயம் இபிஎஸ் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக, “மக்களை ஒரு நாள் அடைத்துவைக்கலாம். நாள்தோறும் அடைத்துவைக்க முடியுமா? முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து ஆண் மகனா, மீசை இருக்கிறதா என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். பதவி வேண்டி மு.க.ஸ்டாலின் யார் காலில் விழுந்திருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது அவருடைய காலில் விழுந்தீர்களே! அவர் மறைந்த பிறகு பதவி வேண்டும் என்பதற்காக மண்புழுவைப் போல ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழுந்தீர்களே! இது தான் உங்கள் ஆண்மையா? நீங்கள் காலில் விழுந்தவர்கள் மீசை வைத்திருந்தார்களா? வேட்டி கட்டுவதும், மீசை வைப்பதும் ஆண்மை ஆகாது” என்று கடுமையாகப் பேசினார். எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் உள்ளிட்ட சிலரும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


























