தான் மத்திய அமைச்சரானால் சாதி அடிப்படையில் வழங்கப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டை மாற்றுவேன் என்று வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தனுஷ் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் வாத்தி. தெலுங்கில் மிஸ்டர் மஜ்னு, ரங் தே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லுரி இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் ’சார்’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வாத்தி படத்தின் பிரமோஷன்களுக்கான நேர்காணல் ஒன்றில் இயக்குநர் வெங்கி அட்லுரி இடஒதுக்கீடு குறித்து தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அவரது இக்கருத்திற்கு கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
நேர்காணலில் அவரிடம் ”நீங்கள் மத்திய அமைச்சரானால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ”நான் மத்திய கல்வித்துறை அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை சாதி அடிப்படையில் வழங்காமல் பொருளாதார அடிப்படையில் வழங்க உத்தரவிடுவேன்” என்று அவர் பதிலளித்துள்ளார். இதற்கு வலைதளங்களில் கடுமையான எதிர்க்கருத்துகள் குவிந்துவருகின்றன.
அண்மையில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள உயர்வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது சர்ச்சையான நிலையில், வெங்கி அட்லுரியின் இக்கருத்து வலுத்த கண்டனங்களைப் பெற்றுவருகிறது. இதனிடையே இன்று வெளியாகியுள்ள வாத்தி படத்தின் வசூலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.


























