ஷின்சோ அபே ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்த நிலையில் , உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகினார். அவருக்குப் பதிலாக யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார்.
யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கொரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்து வந்த நிலையில் யோஷிஹிதே சுகா, கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார். ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே ஜப்பானில் பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால், ஆளுங்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தற்போது சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் புமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார். இவர் ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். நடந்த இந்த தேர்தலில் கோனோ என்பவரும், புமியோ கிஷிடாவும் முதல் வாக்கு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்தபோதிலும் இறுதியில், கிஷிடா 257 வாக்குகளைப் பெற்றார். கோனோ 170 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

ஏற்கனவே 2012 முதல் 2017 வரை புமியோ கிஷிடா, ஜப்பானின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் யோஷிஹிதே சுகாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
























