சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்- ராஜநந்தினி தம்பதியின் மகள் ஜனனி. இவர் அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி ஜனனிக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு இரு சிறுநீரகமும் செயலிழந்தது. சிறுமிக்கு அவரது தாயின் சிறுநீரகம் பொறுத்தப்பட்டது. ஆனால், அதுவும் செயல்படாமல் போகவே செய்வதறியாது திகைத்த பெற்றோர் ஜனனியின் சிகிச்சைக்கு உதவி கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். சிறுமிக்கு உதவிகரம் நீட்ட வேண்டும் என வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வாயிலாகவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி சிறுமி ஜனனி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமிக்கு சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும் சிறுமிக்கு தொலைப்பேசி வாயிலாகவும் அவர் ஆறுதல் கூறினார். இந்நிலையில், இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர், சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு, சிகிச்சை முறை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
























