குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும், மக்கள் செல்வாக்கு மிக்க தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி மற்றும் முன்னாள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தலைவர் கன்ஹையா குமார் ஆகிய இருவரும், செப்டம்பர் 28ம் தேதியான நாளை காங்கிரசில் இணைகிறார்கள்.
இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஆளுமையான இவ்விருவரும் காங்கிரசில் இணைவது அக்கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய அலையை உருவாக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
யார் இந்த ஜிக்னேஷ் மேவானி?

குஜராத்தின் உனா நகர் அருகே மோட்டோ சமதியாலா என்ற கிராமத்தில் இறந்த மாடுகளின் தோலை உரித்த நான்கு தலித் இளைஞரகள் மாடு பாதுகாப்பாளர்களாக கூறிக்கொண்டவர்களால் தாக்குதலுக்கு ஆளாயினர். இந்நிகழ்வை காணொளியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் கொந்தளித்த ஜிக்னேஷ் மேவானி உணா என்ற பதாகையின் கீழ் லடாத் சமிதி அமைப்பின் வழியாக அனைவரையும் ஒருங்கிணைத்தார். இந்திய விடுதலை நாளான ஆகத்து 15, அன்று உனாவைச் சென்றடையக்கூடிய வகையில் “சலோ உனா” என்ற பயணத்தைத் துவக்கினார். இந்த தலித் அஸ்மிதா யாத்திரை செளராஷ்டிராவின், அகமதாபாத்தில் இருந்து உனா நோக்கி தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான தலித் மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்து கொண்டனர். அஸ்மிதா யாத்திரை 2016 ஆகத்து 15 அன்று உணாவில் ஒரு மகாசபை வடிவில் முடிந்தது. ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, தலித் பெண்கள் உட்பட சுமார் 20,000 தலித்துகள், மாட்டு பிணங்களை அப்புறப்படுத்தும் தங்களது பாரம்பரிய வேலைகளை விடுவதாக உறுதிமொழியை எடுத்தனர். மேலும் தங்களுக்கு நிலம் வேண்டுமென்று கேட்டனர். புதிய முழக்கமாக, “நீங்கள் பசுவின் வாலைப் பிடித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு எங்கள் நிலங்களைத் தாருங்கள்” என முழங்கினர். இதன் ஜிக்னேஷ் மேவானி இடது அரசியலில் கவனிக்கத்தக்கவராக ஆனார். 2017 ல் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்கம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸின் ஆதரவுடன் சுயேச்சையாக வெற்றி பெற்றார். ஏனெனில் காங்கிரஸ் அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவில்லை.
யார் இந்த கன்னையா குமார்?
34 வயதானகன்னையா குமார், மோடி அரசுக்கு எதிரான உரைகளால் தேசிய கவனத்தை ஈர்த்த முன்னாள் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் ஆவார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளந்தலைவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். ஜவகர்லால் பல்கலை வளாகத்தில் நாடாளுமன்றத்தைத் தாக்கிய அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக சில மாணவர்கள் ஒருங்கிணைத்த நிகழ்வைக் குறித்து அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிர்ரியும் புகாரளித்ததையொட்டி பிப் 12, 2016 அன்று தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பிப் 13 அன்று அவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-A (தேசத் துரோகம்), 120-B (குற்றவியல் சதி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இவ்வழக்கு பதியப்பட்டது. புலன்விசாரணையின்போது இந்த நிகழ்வில் தானேதும் நாட்டுத் துரோகமானச் சொற்களைக் கூறவில்லை என குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
அவரை விசாரணைக்காக தில்லி பாட்டியாலா மாளிகை நீதிமன்ற வளாகத்துக்கு பெப்ரவரி 15, 17 ஆகிய நாட்களில் அழைத்து வந்தபோது வன்முறை வெடித்தது. ஒரு சில வழக்குரைஞர்களும், வெளிக் கும்பலும் சேர்ந்து கன்னையா குமாரையும் அவருடனிருந்த பிற மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
கன்னையா குமாரின் கைதும் தாக்குதலும் ஓர் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியது; எதிர்க்கட்சிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் அரசின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்தனர். ஜ.நே.ப மாணவர்கள் கைதை எதிர்த்து மேற்கொண்ட வேலைநிறுத்தத்தால் பல்கலைக்கழகம் முடங்கியது
மார்ச் 2, 2016இல் தில்லி உயர்நீதி மன்றம் கன்னையா குமாருக்கு பிணை வழங்கியது; ₹10,000 பிணைப்பணமும் தான் தேசத்துரோக செயற்பாடுகளில் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதிமொழியையும் தரவேண்டும் என விதித்தது. அதன் பின்னர் இளைஞர்களிடம் செல்வாக்கு பெட்ரா கன்னையா குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிபிஐ வேட்பாளராகக் களமிறங்கித் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

இவர்கள் இருவரையும் காங்கிரஸில் இணைக்கும் ஹர்திக் படேல் யார்?
குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர்தான் ஹர்திக் பட்டேல். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறைக்கு 14 பேர் உயிரிழந்தனர். ஹர்திக் படேலும் சிறையில் தள்ளப்பட்டார். அதன் பின்னர் இந்திய அளவில் ஆளுமையாக மாறினார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஹர்திக் படேல் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அந்த கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். பின்னர் சோனியா காந்தியால் குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார்.

























