மனைவி தினமும் குளிப்பதில்லை என்கிற காரணத்துக்காக உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர் விவாகரத்து கோரியிருப்பது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அத்தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர்களுக்கு பெரும் இடைவெளி உண்டாகியுள்ளது. வேலைக்குச் செல்லும் அக்கணவர் மாலை வீடு திரும்புகையில் மனைவை பொலிவின்றியே எப்போதும் தோற்றமளித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த கணவர் ஏன் இப்படி பொலிவில்லாமல் இருக்கிறாய் என்று கேட்டதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இதன் விளைவாக அக்கணவர் அலுவலகத்துக்கு சில நாட்கள் விடுமுறை எடுத்து வீட்டிலிருந்து மனைவியின் நடவடிக்கைகளைக் கவனித்தபோதுதான் அவருக்கு ஒரு உண்மை தெரிய வந்திருக்கிறது. மனைவி தினமும் குளிப்பதே இல்லை என்பதை அவர் கண்டறிந்து அதிருப்தியுற்றிருக்கிறார். இதன் காரணமாக விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக ஆர்வலர்கள் அத்தம்பதியருக்கு கவுன்சிலிங் அளித்து அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வழிவகை செய்து வருகின்றனர்.
























