ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை 4 மாதங்களுக்குள் நிறைவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆயிரம் புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். வரும் மார்ச் மாதத்துக்குள் மீதமுள்ள 75 ஆயிரம் விவசாயிகளுக்கு இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
























