இரத்தத்தில் நைட்ரிக் ஆக்ஸைடு அளவை அதிகரிக்கச் செய்தால், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கவும், உயிர் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் முடியும் என்கிறது சுவீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. அதன் விளைவாக அவர்கள் நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை நோயாளிகளைச் சுவாசிக்க வைக்கிறார்கள். ஆனால் நைட்ரிக் ஆக்சைடு நாம் அடிக்கடி பயன்படுத்தும் பீட்ரூட்டில் இயற்கையாகவே அதிக அளவில் இருக்கிறது
இப்போதெல்லாம் நாற்பது நாற்பத்தைந்து வயது உள்ளவர்களுக்கு மாரடைப்பு என்கிற செய்தியை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதும், இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும் மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்.
நம் உடலின் பிற பாகங்களில் ஏற்படும் குறைபாடுகளுக்கு மருந்து சாப்பிடலாம். ஆனால், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நம் இதயத் தசைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பக்க விளைவுகளற்ற நேரடி மருந்துகள் அவ்வளவாக இல்லை. இந்த இதயத் தசைச் சிக்கல்களை இயற்கையாக நிவர்த்தி செய்யும் வல்லமை பெற்ற ஒரு உணவுப் பொருள்தான் பீட்ரூட்.
பீட்ரூட் ஜூஸ் எடுத்து அருந்திவிட்டு, எக்கோ கார்டியோகிராம் [ECG] எடுக்கும்போது, இதய தசைகளின் செயல்பாடு 13% அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடித்து நிறுவியிருக்கிறார்கள். பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது, இதய குழாய்கள் 6 மணிநேரம் விரிவடைந்து இருக்கும். இதனால் நம் இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராக ஆகி இரத்த அழுத்தத்திற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறையும்.

உயர் இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகள் பெருமளவில் நைட்ரிக் காம்பினேஷனில் இருக்கும். உதாரணமாக, நைட்ரொ காண்டின் [Nitro Contin], நைட்ரோ கிளிசரின் [Nitroglycerin] போன்ற மாத்திரைகளைச் சொல்லலாம். இந்த மாத்திரைகள், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு, இதய இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வேலையைச் செய்கிறது. இதய நோயாளிகளுக்கு நெஞ்சு வலி ஏற்படும்போது, நாக்கிற்கு அடியில் வைக்கும் மாத்திரைகள், இதய இரத்தக்குழாய்களை விரிவடைய வைக்கும் வேலையைச் செய்யும். அவை எல்லாம் வேதிப் பொருள்கள் கலந்த மாத்திரைகள். ஆனால் இயற்கை நமக்குக் கொடுத்த வரப்பிரசாதம் பீட்ரூட்!
பீட்ரூட் ஜூஸ், பெரியவர்கள் தினமும் 250 மி.லி. அளவுக்கு குடிக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு பீட்ரூட், இரண்டு கேரட், ஒரு துண்டு இஞ்சி சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து, அரை எலுமிச்சைச் சாறு சேர்த்து குடித்தால், 6 மணி நேரத்துக்கு இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். கோபம், அதிர்ச்சி போன்ற எந்த ஒரு புறச் சூழ்நிலையாலும் இரத்த அழுத்தம் மிகைப்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். அதுமட்டுமின்றி பீட்ரூட்டுடன் இந்த ஸ்பெஷல் ஜூஸில் இஞ்சி, எலுமிச்சை, சேர்வதால் கொழுப்பும் வெகுவாக நம் உடலில் குறையும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அளவு மாறுபாட்டுடன் அனைவரும், பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.
குறை இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த ஜூஸ் ஃபார்முலா சற்றே வேறுபடும். அவர்கள் பீட்ரூட் ஜூஸைத் தனியாக எடுக்காமல், அரை பீட்ரூட், இரண்டு கேரட்டோடு, ஒரு அரை ஆப்பிள் சேர்த்து ஜூஸாக்கி குடிக்கலாம். குறை இரத்த அழுத்தம் கொண்டவர்கள் நாளொன்றுக்கு அரை பீட்ரூட்டுக்கு மேல் எடுக்க வேண்டாம். அவர்கள் பீட்ரூட் ஜூஸ் அதிகமாகக் குடித்தால், மேலும் இரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளது.
நம்மில் சில பேர் வாய் துர் நாற்றத்திற்கு என்ன செய்யலாம் என்ற தவிப்பில் நாள் முழுவதும் இருக்கிறார்கள். தொடர்ந்து இந்த பீட்ரூட் ஜூஸ் அருந்தி வந்தாலே வாய் துர்நாற்றம் படிப்படியாக மறைந்து போய்விடும்.
பீட்ரூட் ஜூஸ் சரியான அளவில்தான் குடிக்கிறோமா? அல்லது ஓவர் டோஸாகிவிடுகிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
ஒருவர் நாள்தோறும் பீட்ரூட் எடுத்து வரும்போது சிறுநீர் எப்போதும்போல வெளிர் மஞ்சல் அல்லது வெண்ணிறமாகப் போனால், நைட்ரிக் ஆக்ஸைட் உடம்பில் குறைவாக இருக்கிறது எனப் பொருள். இன்னும் பீட்ரூட் சாறு குடிக்க வேண்டுமென அதனால் அறியலாம். சிறுநீர், மலம், இளஞ்சிவப்பு நிறத்திலோ, பீட்ரூட் நிறத்திலோ போனால், இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது, இரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை, அவசர நிலை எதுவும் இல்லை, எனப் புரிந்து கொண்டு அத்தோடு பீட்ரூட் சாறு அருந்துவதைச் சில நாட்களுக்கு நிறுத்திக்கொள்ளலாம். அவர்கள் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்குப் வேறு ஏதாவது பழச்சாறு எடுத்துக்கொள்ளலாம்.
வைட்டமின் ‘D’ சூரிய ஒளியிலிருந்து நமக்குக் கிடைத்தாலும், அதை நம் உடல் குறைவாகவே கிரகித்துக்கொள்கிறது. பீட்ரூட், வைட்டமின் ‘D’-ஐ நமது உடல் அதிகமாக கிரகித்துக்கொள்ள பேருதவி புரிகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கல்லீரல் மற்றும் நுரையீரலில் உள்ள நச்சுப் பொருட்களை Detoxification செய்து வெளியேற்ற பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூட்டைச் சமைத்து சாப்பிடுவதைவிட, ஜூஸாகவோ பச்சையாகத் துருவியோ கேரட் போன்ற பிற காய்கறிகளோடு சாலட் போலச் சாப்பிடுவதே சிறந்த பலனைத் தரும். இந்தக் கொரானா பெருந்தொற்று காலத்தில் நிறைய மருந்து மாத்திரைகள் ஆண்ட்டி பயாடிக்ஸ் எடுத்துக்கொள்கிறோம். ஒரு சாதாரண காய்ச்சலுக்கு பாராசிட்டமால் உட்கொண்டாலே அதன் நச்சு கல்லீரலில்தான் தங்கும். அந்த நச்சுக்களை வெளியேற்றும் வேலையை பீட்ரூட் அற்புதமாக செய்கிறது. கீமோ தெரப்பி, ரேடியோ தெரப்பி, எடுத்துக்கொள்ளும் கேன்சர் நோயாளிகளுக்கு, சிகிச்சைக்குப் பிறகு பீட்ரூட் எடுத்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் வேலையை பீட்ரூட் மிக அற்புதமாகச் செய்கிறது.
அழகைக் கூட்டும் பீட்ரூட்!
பீட்ரூட் முகச்சுருக்கத்தைப் போக்குகிறது. நிறைய அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பில் பீட்ரூட்டை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். கடைகளில் கிடைக்கும் பலவகையான கிரீம்களை வாங்கி பணத்தை வீணாக்காமல் இயற்கையாகக் கிடைக்கும் பீட்ரூட்டைப் பயன்படுத்தி நாம் நிறைந்த நன்மைகளைப் பெற முடியும். நச்சுத்தன்மை வாய்ந்த உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்காத, இயற்கை முறையில் விளைவித்த பீட்ரூட் கிடைத்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள்தான்.
உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கிறதா? கொலஸ்ட்ரால் இருக்கிறதா? உடனே மாத்திரைகளைத் தேடி ஓட வேண்டியதில்லை. ஒரே முறை பீட்ரூட் ஜூஸ் அருந்திவிட்டு ஒரு மணி நேரம் கழித்து இரத்த அழுத்தத்தைப் பரிசோதியுங்கள். உறுதியாக உங்கள் இரத்த அழுத்தம் 10 மி.மீ. அளவு குறைந்திருக்கும். அது போலத் தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது தேவையற்ற கொழுப்பும் கரைந்து காணாமல் போகும்.
தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால், தலை உள்ளிட்ட உடலின் அனைத்துப் பாகங்களிலும் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால், நாட்பட்ட தலைவலி நீங்குகிறது. பீட்ரூட்டில் பீட்டாக் கரோட்டின், விட்டமின் ’ஏ’ அதிகமாக இருப்பதால், கண்புரை உள்ளிட்டக் கண் சார்ந்த பிரச்சினைகளையும் அது சரி செய்கிறது.
பீட்ரூட் பற்றி நாம் இவ்வளவு பேசும்போது, இயல்பாகவே சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவு கூடுமே என்ற கேள்வி நமக்கு எழலாம். பொதுவாகச் சர்க்கரை நோயாளிகள் நிலத்தின் கீழே விளையும் காய்களைக் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட்டை சமைத்துச் சாப்பிடும்போது உடல் எடைக் கூடினாலும், பச்சையாகத் துருவி சாலட்-ஆக எடுத்துக்கொள்ளும்போது அவ்வளவாக எடை கூடுவதில்லை. ஒரு முழு பீட்ரூட்டை எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவு கூடும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தும், உடலுக்கு நைட்ரிக் ஆக்ஸைட் தேவைப்படுபவர்கள் அரை பீட்ரூட்டை பச்சையாக எடுத்துக் கொள்ளலாம். எனவே, பீட்ரூட் சாறு அருந்தி பீதியின்றி வாழ்வோம்!
























