இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் பணிகள் நிறைவு பெற்று விட்டதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் இலக்கியத்தின் க்ளாசிக்காக கொண்டாடப்படுவதோடு லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டது. இந்நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என்கிற கனவு தமிழ் திரைத்துறைக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. நடிகர் எம்.ஜி.ஆர் கூட அதற்கான முயற்சிகளில் இறங்கினார். படத்தின் பொருட்செலவு காரணமாக அக்கனவு கைகூடாமலேயே இருந்தது.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்கியிருக்கிறார். ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, விக்ரம், பார்த்திபன் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடிக்கும் இத்திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது.
இதன் முதல் பாகத்தின் பணிகள் நிறைவடந்து விட்டதாக அலுவல்பூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழின் கிளாசிக்கான பொன்னியின் செல்வன் நாவல் 5 இந்திய மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு கூடி வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
























