தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரியாரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடர் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணியளவில், மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
























