உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் மீண்டும் படத்தயாரிப்பு / வெளியீடு பணிகளில் இறங்கியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் தயாராகியுள்ள அரண்மனை 3 படத்தை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 1 மற்றும் 2ம் பாகங்கள் வெற்றியடைந்த நிலையில் மூன்றாம் பாகம் ஆர்யா, ராஷி கண்ணா ஆகியோரது நடிப்பில் தயாராகியிருக்கிறது. குஷ்புவின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினிமேக்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இத்திரைப்படம் அக்டோபர் 14ம் தேதி வெளியாகவுள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ‘குருவி’ படத்தைத்தான் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் முதலில் தயாரித்தது. பின்னர் நிறைய படங்களைத் தயாரித்து வந்த இந்நிறுவனம் அதிமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களை மட்டுமே தயாரித்தது. திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் வேளையில் மீண்டும் ரெட் ஜெய்ண்ட் மற்ற படங்கள் வெளியீட்டில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
























