தலிபான்களின் அமைச்சரவையில் ஏன் ஒரு பெண் கூட இல்லை என்கிற கேள்விக்கு பெண்களின் வேலை குழந்தைகளை ஈன்றெடுப்பதுதான். அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் கிளம்பிய பிறகு தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளனர். இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. அமைச்சரவைப் பட்டியல் வெளியானபோதே இதுகுறித்த கேள்வியும் சர்ச்சையும் உண்டானது.
இந்நிலையில், தலிபான் ஆட்சியில் பெண்கள் அமைச்சரவையில் ஏன் இடம் பெறவில்லை என TOLO நியூஸ் சார்பில் தலிபான் செய்தி தொடர்பாளர் சையத் ஜெக்ருல்லா ஹாஷிமி கேள்வி கேட்டது. அதற்குபதிலளித்து பேசிய அவர், “பெண்களால் அமைச்சராவது முடியாத காரியம். அவர்களை அமைச்சரவையில் இடம் பெற செய்ய வேண்டிய தேவையும் இல்லை. அவர்கள் பிள்ளைகளைத்தான் ஈன்றெடுக்க வேண்டும். ஆப்கனில் போராடி வரும் பெண் போராட்டக்காரர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் பெண்களைச் சார்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது” என பதில் அளித்துள்ளார்.
பெண் உரிமை, சம உரிமை நடமுறையில் இருக்கும் இக்காலத்திலும் பெண்கள் குறித்த கருத்தில் மிகவும் பின்தங்கிய மனப்பான்மையுடனே தலிபான்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் மாறி விட்டதாகச் சொன்னாலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்னும் இருக்கிறார்கள் என்பதையே இந்த பதில் காட்டுகிறது என்றும் இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
























