பாரம்பரியமிக்க ஓர் நகைக்கடை திருநங்கையை மையப்பாத்திரமாகக் கொண்டு ஓர் விளம்பரப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளது. திருநங்கைகள் பற்றிய புரிந்துணர்வு இன்னும் முழுமையாக ஏற்படாத நிலையில் இம்முயற்சி ஓர் வரவேற்கத்தக்க முயற்சியாக இருக்கிறது என பலரும் பாராட்டி வருகின்றனர்.
பீமா நகைக்கடையின் விளம்பரம்தான் இது. 1 நிமிடம் 40 நொடிகள் ஓடக்கூடிய விளம்பரப்படத்தில் முகத்தில் தாடி மீசையோடும், பெண் தன்மையோடும் காணப்படும் ஆண் இறுதியில் நம்பிக்கை மிகுந்த ஓர் அழகான மணப் பெண்ணாக வருவதைப் போல் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. திருநங்கைகளைப் பற்றிய புரிந்துணர்வு இருப்பவர்களால் இந்த விளம்பரத்தை புரிந்து கொள்ள முடியும்.

பிறப்பால் ஆணாக இருந்தாலும் அவர்கள் தங்களை பெண்ணாகவே உணர்கிறவர்கள்தான் திருநங்கைகள். அவர்களுக்கும் பெண்களைப்போலவே நடை உடை பாவனைகள் இருக்கும். ஆனால் சமூகத்தின் பார்வையில் ஒதுக்கப்பட்டவர்களாக பல காலமாக இருந்து வரும் அவர்கள் சமீப காலங்களில் சற்றே முன்னேற்றத்தைப் பெற்று வருகின்றனர். அந்த அடிப்படையில் ஓர் திருநங்கையின் திருமணத்தைப் பற்றி இந்த விளம்பரம் பேசியிருக்கிறது என்பதால் பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

22 வயதான மீரா சிங்கானிய ரெஹானி இவ்விளம்பரத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறார். உண்மையிலும் அவர் ஓர் திருநங்கை என்பதே இவ்விளம்பரத்தின் சிறப்பு. திருநங்கையாக மாறும் பரிணாமத்தில் குடும்பத்தார் அளிக்கும் ஆதரவு இப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இது போன்று சமூகத்தில் பேசத்தயங்கும் விசயத்தைப் பேசியதால் இந்த விளம்பரப் படம் நல் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
























