பயிர்கள் செழித்து வளரும் தோட்டங்களில் கண் திருஷ்டி படாமல் இருக்கச் சோளக்காட்டு பொம்மை, பழைய செருப்பு, கருப்பு மை பூசிய பானை ஆகியவற்றைத் தொங்கவிடுவது வழக்கம். கர்நாடகாவில் சில விவசாயிகள் இதற்காக நடிகைகளின் படங்களைப் பயன்படுத்துகின்றனர். மக்காச்சோளம், புடலங்காய், தர்ப்பூசணி தோட்டங்களிலும் இந்த முறை உண்டு எனக் கூறப்படுகிறது.
இந்த வரிசையில், கதக் மாவட்டம் முல்குண்ட் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவானந்த், தன் மிளகாய்த் தோட்டத்தில் நடிகைகள் ரச்சிதா ராம், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் புகைப்படங்களை இரு கம்புகளில் கட்டித் தொங்கவிட்டுள்ளார். தற்போது செடிகளில் மிளகாய் காய்த்துக் குலுங்குகிறது.
அந்த வழியாகச் செல்வோர் மிளகாய்ச் செடிகளைப் பார்க்காமல் படங்களையே பார்த்துச் செல்வார்கள் என்றும், அதனால் திருஷ்டி விழாது என்றும் சிவானந்த் கூறுகிறார். இந்தப் புதிய யோசனை மக்களிடையே பேசுபொருளாகி வருகிறது.
















