மேற்கு வங்கத்தில் பிளஸ்-1 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் கைதான பிரகலாத் தாஸ், இன்று அதிகாலை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்ப முயன்றதால் சுட நேர்ந்தது என்பது போலீசாரின் தரப்பு.
24 பர்கானாஸ் மாவட்டத்தில், இந்தியா – வங்கதேச எல்லையை ஒட்டிய கைகாட்டா கிராமத்தைச் சேர்ந்த மாணவி, 3 நாட்களுக்கு முன் தாத்தா, பாட்டியுடன் ஒரு கலாசார நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். செல்போன் அழைப்பு வந்ததும் வெளியே சென்ற அவர் திரும்பவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டருகே அவரது உடல் மீட்கப்பட்டது; தலையிலும் உடலிலும் காயங்கள் இருந்தன.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. மாணவிக்கு அறிமுகமான ஷிமுல்பூரைச் சேர்ந்த பிரகலாத் தாஸ் கைது செய்யப்பட்டார். மாணவியின் தாயைப் பற்றிப் பேசியதில் ஏற்பட்ட தகராறில் இக்குற்றத்தைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாகப் போலீசார் கூறினர். அவரை போங்கான் நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிட்டது.
இன்று அதிகாலை போங்கான் நகருக்கு வெளியே வேனில் சென்றபோது, போலீசாரின் துப்பாக்கியைப் பறித்துச் சுடுவதாக மிரட்டி அவர் ஓடியதாகவும், தாக்கியதால் போலீசார் தற்காப்புக்காகச் சுட்டதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 4 மாதங்களில் மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாவது என்கவுன்டர் இது; ஜூலையில் பாருய்பூரில் சிறுமி வழக்கின் குற்றவாளி பிரபாஸ் மொண்டல் இதேபோல் சுடப்பட்டு உயிரிழந்தார்.
















