மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு இது வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி ஏமி கோல்மன், திங்கட்கிழமை அதிகாரபூர்வ வலைப்பதிவு மூலம் ஊழியர்களுக்கு இதைத் தெரிவித்தார்.
இது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமான சலுகை. ஏற்றுக்கொண்டு வெளியேறுவோருக்கு நிலையான பணிநீக்க இழப்பீடு, பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிமுறைகள், தொழில் மாற்றத்துக்கான உதவிகள் ஆகியவை வழங்கப்படும். நிலை 70 மற்றும் அதற்குக் கீழுள்ள ஊழியர்கள் தகுதி பெறுகின்றனர். சுமார் 2,23,000 ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தில் இது ஏறத்தாழ 27 சதவீதம் ஆகும்.
சலுகை அனைத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தாது. கோபைலட், கோர்ஏஐ, விண்டோஸ், எக்ஸ்பாக்ஸ், நிதி, மனிதவளம் போன்ற குழுக்கள் இதில் அடங்கும்; சந்தைப்படுத்தல், வணிகம், பாதுகாப்பு போன்ற குழுக்கள் விலக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் டிசம்பருக்குள் முடிவைத் தெரிவிக்க வேண்டும்; ஏற்பவர்கள் டிசம்பர் 31 அன்று நிறுவனத்திலிருந்து விலகுவர்.
செயற்கை நுண்ணறிவு கணினி மற்றும் கிளவுட் திறனை விரிவாக்க, தரவு மையங்களுக்காக 2026-ல் சுமார் 175 பில்லியன் டாலர் மூலதனச் செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் செலவுகள் கூடியதே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது. இது கட்டாயப் பணிநீக்கம் அல்ல என்றாலும், அமெரிக்காவுக்கு வெளியே மிக அதிக ஊழியர்கள் உள்ள இந்தியாவில் இதன் தாக்கம் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலையில் நிறுவனம் சுமார் 4,800 பேரைப் பணிநீக்கம் செய்திருந்தது.
















