ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு வகைகள் உள்ளிட்ட 67 பொருட்களின் விலை நாளை (அக்டோபர் 28) முதல் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். சிவராசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்களுக்குக் கூடுதல் சுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏற்கெனவே உயர்ந்துவரும் விலைவாசியில் தமிழக அரசு மேலும் சுமையை ஏற்றுவதாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆவின் நிர்வாகம், உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு குறைந்த அளவிலேயே விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. உயர்வுக்குப் பிறகும் பிற கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருட்களைவிட ஆவின் உபபொருட்களின் விலை குறைவாகவே உள்ளது என்றும் அது கூறியுள்ளது.
இந்த விலை திருத்தத்தால் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்துக்கும் மேலான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் என்றும், நுகர்வோருக்குத் தரமான பால் உபபொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கவே இந்த நடவடிக்கை என்றும் ஆவின் தெரிவித்துள்ளது.
















