மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் காணாமல்போன 7 வயது சிறுவன் முத்துவேல் இறந்து கிடந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடியபோது நேர்ந்த விபரீதமே மரணத்துக்குக் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. உடலை மறைத்ததாக உறவினரான பெண்ணும் அவரது 10 வயது மகனும் கைதாகியுள்ளனர்.
தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் மகன் முத்துவேல், நேற்று முன்தினம் விளையாடச் சென்றபின் வீடு திரும்பவில்லை. தாய் அளித்த புகாரின்பேரில் தேடுதல் நடந்தது. நேற்று மதியம் அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளமும், உடைந்த பல்லும், உடலில் காயங்களும் இருந்தன.
அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, முத்துவேல் கடைசியாக உறவினரின் 10 வயது மகனுடன் விளையாடியது தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் இன்று அளித்த விளக்கத்தின்படி, அந்தச் சிறுவன் முத்துவேலின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்தபோது அவர் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தார்.
நடந்ததை மகன் கூறியதும், அவனது தாய் சந்தியா அங்கு சென்று பார்த்தபோது முத்துவேல் அசைவற்றுக் கிடந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி, மகனைக் காப்பாற்றும் எண்ணத்தில் உடலைப் பாழடைந்த வீட்டில் போட்டுவிட்டு, தாயுடன் சேர்ந்து தேடுவது போல நடித்ததாகக் காவல்துறை கூறுகிறது.
விசாரணையில் சந்தியா உண்மையை ஒப்புக்கொண்டதால், கீழவளவு போலீசார் இருவரையும் கைது செய்தனர். சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது. முத்துவேலின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
















