கே.என்.நேருவைத் தொடர்ந்து அவரது சகோதரர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஆள்சேர்ப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் அவர்கள் தொடுத்த மனுக்களை நீதிபதிகள் ஏற்கவில்லை.
பின்னணி: திமுக ஆட்சியில் 2,538 உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் வாங்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. அந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிய ஊழல் தடுப்புத் துறைக்கு பிப்ரவரி 20-ஆம் தேதி நீதிமன்றம் ஆணையிட்டது.
அந்த ஆணையை மீண்டும் பரிசீலிக்கக் கோரிய நேருவின் மனு நேற்று தள்ளுபடியானது. அதன் பின்னர் இன்று, சகோதரர்களான கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன் மற்றும் டி.கவிபிரசாத், டி.ரமேஷ், ஆர்.நாராயணன், தியாகராஜன் செல்வமணி ஆகியோரின் மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. மறு ஆய்வு மனு போடவே அனுமதி கேட்ட இவர்களின் கோரிக்கையையும், நேருவின் மனு ஏற்கெனவே தள்ளுபடியானதைக் காரணம் காட்டி அமர்வு நிராகரித்தது.

















