அர்னாப் புயல் ஆந்திரக் கடற்கரையை நெருங்குவதால், புதுச்சேரிக்குச் சொந்தமான ஏனாம் பகுதியில் முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 2 கம்பெனி தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், புதுவையிலிருந்து 33 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவும் அங்கு சென்றுள்ளனர்.
வங்கக் கடலில் உள்ள இப்புயல் வடக்கு திசையில் நகர்ந்து, புதன்கிழமை முற்பகலில் கரையை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாமுக்கு அருகில் அதிதீவிரப் புயலாகக் கடக்கக்கூடும்.
ஏனாமில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களும் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. செவ்வாய் மாலை 4 மணி தொடங்கி 29-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூடுமாறு மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா ஆணையிட்டுள்ளார்.
பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து மக்களை மாற்ற 19 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதியிலுள்ள 142 குடிசை வீடுகளைச் சேர்ந்த 552 பேர் ஏற்கெனவே முகாம்களுக்குச் சென்றுவிட்டனர். மேலும் 52 மாற்றுத்திறனாளிகள் முகாம்களிலும், பிரசவ நாள் நெருங்கிய 5 கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கண்காணிப்பில் உள்ளனர்.
















