ஆந்திரக் கடலோரத்தை நோக்கி வரும் அர்னாப் அதிதீவிரப் புயல், நாளை முற்பகலில் ஏனாம் அருகே நிலப்பகுதியைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏனாம், ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் நிர்வாக ரீதியாகப் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பிராந்தியம். புயல் கடக்கும் இடம் பாபட்லா – விசாகப்பட்டினம் இடைப்பகுதி.
கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. ஆகவும், சில சமயம் 150 கி.மீ. வரையிலும் இருக்கலாம். இன்றைய நிலவரப்படி புயல் விசாகப்பட்டினத்துக்குத் தெற்கு – தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவுக்குக் கிழக்கு – தென்கிழக்கே 240 கி.மீ. தொலைவிலும் இருந்தது; 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்காக நகர்ந்தது.
ஆந்திர அரசின் ஏற்பாடுகள்: காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஏலூரு மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை; பல கடலோர மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. விசாகப்பட்டினத்தில் மட்டும் 54 நிவாரண முகாம்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில், அவசர நிதியாக ரூ.27 கோடி.
ஒடிசாவிலும் ஏற்பாடுகள் நடக்கின்றன. நபரங்பூர், ராயகடா, பூரி மாவட்டங்களில் அக்டோபர் 27, 28 ஆகிய நாட்களும், கோராபுட், கஞ்சம் மாவட்டங்களில் 27 முதல் 29 வரையும் பள்ளிகளுக்கு விடுமுறை. 6 மாவட்டங்களில் சுற்றுலாத் தலங்களுக்குத் தடை. கஜபதியில் 15,000 பேரைத் தங்கவைக்க 281 மையங்கள் தயார்; 8 ரயில்கள் ரத்தாகியுள்ளன.
தமிழகத்துக்குப் பாதிப்பு இருக்காது என்று கூறப்பட்டாலும், மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிக்கிறது. நெம்மேலி, சூலேரிக்காடு, புது கல்பாக்கம், கொக்கிலமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 10 அடிக்கு மேல் அலைகள் எழுகின்றன. சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். மறு உத்தரவு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், சுமார் 2,000 படகுகளின் தொழில் முடங்கியுள்ளது.
















