தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் பதிவான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றம் அவரை நவம்பர் 6 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து, நள்ளிரவு 12.30 மணிக்கு புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரைச் சிறையில் சந்தித்துப் பேசினார்.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப் பெருந்தொகை லஞ்சமாகப் பெறப்பட்டதாக எழுந்த புகார் இந்த வழக்கின் அடிப்படை. இதில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகியும் திமுக பிரமுகருமான பி.டி.அரசகுமார் ஜூன் மாதம் கைதானார்; அவரது உறவினர்கள் ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் அன்பில் மகேஷ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.
முன்ஜாமீன் கோரிய அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதன்பிறகு அமைந்தகரையில் உள்ள மூத்த வழக்கறிஞர் வில்சனின் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்தபோது, மாலை சுமார் 3 மணிக்குக் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேப்பேரி ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடந்தபோது, திமுக வழக்கறிஞர்களும் தொண்டர்களும் அங்கு திரண்டனர்; முன்னாள் அமைச்சர் சேகர் பாபு போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் இரவு சுமார் 2 மணி நேரம் வாதம் நடந்தது. அரசுத் தரப்பில் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும், இணையவழிப் பணப்பரிமாற்றம் குறித்து மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், ஜாமீன் கிடைத்தால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். அலுவலகத்துக்கு வெளியே ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகே கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் தரப்பில் வில்சன், வழக்குப் பதிய ஆளுநரிடம் முன் அனுமதி பெறப்படவில்லை என்றும், வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்துச் சட்டவிதிகளை மீறிக் கைது செய்யப்பட்டதாகவும், செப்டம்பரில் அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்துள்ளதாகவும் வாதிட்டார். கோப்புகளில் அமைச்சர் மட்டுமின்றி அதிகாரிகளும் கையெழுத்திடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இருதரப்பையும் கேட்ட நீதிபதி சத்யமூர்த்தி, நவம்பர் 6 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
















