முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது, முதல்வர் விஜய் குறித்து மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படும் வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடி மோசடி நடந்ததாக வந்த புகாரில் அன்பில் மகேஷ் நேற்று கைதானார். நள்ளிரவு 12.30 மணிக்கு அவர் புழல் சிறைக்குக் கொண்டு வரப்பட்டபோது, திமுகவினர் போலீஸ் வேனை வழிமறித்து தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அன்பிலைச் சிறைக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், முதல்வர் விஜய் குறித்து வன்முறையைத் தூண்டும் வகையில் ஒருமையில் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் யார் என்று விசாரித்தபோது, வேலூர் மாவட்டம் 12-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் என்பது தெரியவந்தது. அவர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர் என்றும் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.
அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது பேச்சின் பின்னணியில் உண்மையிலேயே ஏதேனும் திட்டம் இருந்ததா என்பது குறித்தும் விசாரிக்கப் போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
















