தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தில், 9 சிறைக்காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பியவர்களில் இதுவரை 4 பேர் பிடிபட்ட நிலையில், மீதமுள்ள 13 பேரைத் தேடும் பணி தொடர்கிறது.
நேற்று (அக்டோபர் 26) இரவு ஒரு கைதி வலிப்பு வந்தது போல நடித்ததாகவும், அறையைத் திறந்த காவலர்களைத் தாக்கிவிட்டு 17 பேரும் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ஒரு சிறைக்காவலரின் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைக்குப் பின்புற வனப்பகுதியில் பதுங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த பிரவீன்குமார் முதலில் பிடிபட்டார். பின்னர் தேனியைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று (அக்டோபர் 27) நேரில் ஆய்வு செய்தார். மனிதத் தவறுகளே இதற்குக் காரணம் என்றும், மூன்றடுக்குப் பாதுகாப்பையும் மீறிக் கைதிகள் தப்பியது விதிமீறலைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலமும், சிறப்பு அதிரடிப்படை மூலமும் தேடுதல் நடக்கிறது. தமிழ்நாடு – கேரள எல்லையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் 9498101570 அல்லது 9176104100 என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம்.
















