தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முக்கிய சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.160 முதல் ரூ.170 வரையும், பெரிய வெங்காயம் ரூ.80 வரையும் விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் ரூ.180 வரை செல்கிறது.
பெரிய வெங்காய சந்தைகளுக்கு வழக்கமாக தினமும் 30 லாரிகளில் சின்ன வெங்காயமும் 20 லாரிகளில் பெரிய வெங்காயமும் வரும். தற்போது வரத்து பாதியாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி காய்கறிச் சந்தைக்கு வழக்கமாக 600 முதல் 700 மூட்டைகள் வரும் நிலையில், இப்போது 300 மூட்டைகளே வருகின்றன.
கடந்த வாரம் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்ற சின்ன வெங்காயம் இப்போது உயர்ந்துள்ளது. ரூ.50-க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.80 ஆகியுள்ளது. மழை காரணமாக பாவூர்சத்திரத்திலிருந்து தக்காளி வரத்து நின்றதால் ஆந்திராவிலிருந்து தக்காளி கொண்டுவரப்படுகிறது; இதனால் ரூ.25 ஆக இருந்த தக்காளி கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கிறது.
தீபாவளி நெருங்கும்போது விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாகவும், வரத்து அதிகரித்தால்தான் விலை குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வால் விற்பனை மந்தமாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
















