தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு சிறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருப்பது, சிறை நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் சிறைத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள பெரிய குறைபாட்டை வெளிப்படுத்துவதாகவும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
17 கைதிகளும் எப்படித் தப்பினர், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் என்ன செய்தனர், கண்காணிப்பு முறையாக நடந்ததா என்ற கேள்விகளுக்கு அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தப்பியோடியவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உயர்மட்ட விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கை.
















