நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் வழக்குப் பதிய வேண்டும் எனவும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை தொடர்ந்த வழக்கில், கடந்த பிப்ரவரியில் உயர் நீதிமன்றம் அவ்வாறே உத்தரவிட்டது.
தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமது உரிமை பாதிக்கப்பட்டதாக நேரு மறு ஆய்வு மனுவில் குறிப்பிட்டிருந்தார். முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவைத் தற்போதைய அரசு திரும்பப் பெற முடியாது என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் கடிதம் எழுதியும் முந்தைய திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் நேருவைப் பாதுகாத்ததாகவும், இதற்கான அவகாசத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் வாதிடப்பட்டது. தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.


















