இசைஞானி இளையராஜா இசையில் சிறந்தவராக இருந்தாலும் மனிதனாக மிகவும் மட்டமானவர் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ நிகழ்ச்சி மூலம் தமிழில் பிரபலமானவர் ஜேம்ஸ் வசந்தன். தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கியுள்ள இவர், ’சுப்ரமணியபுரம்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ஈசன், பசங்க, நாணயம், அமைதிப்படை 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர், சினிமா, அரசியல் சார்ந்த நடப்புக் கருத்துகளை ஒளிவுமறைவின்றி அவ்வப்போது வெளிப்படுத்திவருகிறார். அவரது பேச்சுக்கு ஆதரவும், அதே சமயம் எதிர்ப்பும் ஒரு சேரக் கிளம்பும்.
அப்படி, இளையராஜா குறித்து அவர் தற்சமயம் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் பேசுபொருளாக ஆகியுள்ளது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த அவரிடம், இளையராஜா குறித்து எப்பொழுதும் எதிர்மறையான கருத்துகளை அவர் பரப்புவதாகவும், அதற்கான காரணமும் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த அவர், ”இளையராஜாவை ஒரு இசையமைப்பாளராக நான் விமர்சித்ததே இல்லை. ஏனெனில் இன்றும் எனக்கு இசையில் அவர் தான் குரு. ஆனால், ஒரு தனி மனிதனாக அவர் மட்டமான நபர். சமீபத்தில் கூகுள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சம்பந்தமே இல்லாமல் ஏசு கிறிஸ்து குறித்து தவறான கருத்தை அவர் கூறியுள்ளார்.
கிறிஸ்துவர்களின் அடிப்படை நம்பிக்கையே அவர் சிலுவையில் அறையப்பட்டதும், 3ம் நாள் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதும் தான். ஆனால், இவர் முட்டாள் போல், ’ஏசு வந்தாரா வாழ்ந்தாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ரமணமகரிஷி ஒருவர் தான் இறந்து உயிர்த்தெழுந்தவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது அவருக்கு தேவையான விஷயமா?
ஆன்மீகத்தில் நம்பிக்கையுடைய முதிர்ச்சியான நபராக இருந்தால், அவர் ரமணமகரிஷி குறித்து மட்டும் பேசியிருக்கலாம் அல்லவா? எதற்காக பிறரது நம்பிக்கைகள் குறித்து அவர் தவறாகப் பேசவேண்டும். ரமணமகரிஷியின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த இயக்குநரே அவர் சாகவில்லை என்றும், வலிப்பின் காரணமாக அவர் 5 மணி நேரங்கள் அசைவற்றிருந்து மீண்டும் எழுந்ததாக குறிப்பிடும்போது பொய்யாக, பண்பில்லாமல் இளையராஜா இப்படி பேசலாமா?
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்கள் ஏசுவைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அவர்கள் காயப்படும்படி இப்படி இவர் பேசியிருக்கலாமா? இவர் என்ன வரலாற்று ஆசிரியரா? இது குறித்தெல்லாம் பேச. இப்படி, ’எல்லாரும் தவறு, தான் தான் சரி’ என்று கேவலமான புத்தியுடைய கேவலமான நபராக இளையராஜா இருக்கிறார்” என்று மிகவும் ஆவேசமாகப் பேட்டியளித்துள்ளார். இக்காணொலி தற்சமயம் வைரலாகிவருகிறது.
இதற்கு பெருவாரியான ஆதரவு அவருக்கு கருத்துகள் மூலமாக தெரிவிக்கப்பட்டாலும், இளையராஜா ரசிகர்கள் சிலர் அவருக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதில் பேட்டி காண்பவர் ஜேம்ஸ் வசந்தனிடம், ’நீங்கள் பேசும்போது அறியாமல் அவரை முட்டாள் என்றீர்கள்’ என்று சொன்னதற்கு, ’நான் ஊடகத்துறையில் 27 வருடங்கள் இருந்தவன். நான் இந்த வீடியோவை பலர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே தான் அவரை அப்படிக் கூறினேன்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


























