ராகுல்காந்தியை தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க பாஜக செய்துள்ள சதியே இந்த சிறை தண்டனை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் கோலார் பகுதியில் பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் வைத்துள்ள நபர்கள் திருடர்களாக இருப்பதாக பேசியது சர்சையை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தி, மோடி சமுதாயத்தினரை அவமதித்துவிட்டதாக பாஜக எம்.எல்.ஏ. புருனேஷ் மோடியால் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் ராகுலின் தண்டனை அறிவிப்புக்கு எதிராக தங்களது எதிர்க்கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி நிற்பதைத் தடுக்க பாஜக சதி செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”நீதிமன்றத்தை பயன்படுத்தி, வரும் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிடாமல் இருக்க சதி செய்யும் பாஜகவின் மலிவு போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற குற்றச் செயல்கள் சங்-பரிவார்களைத்தான் அம்பலப்படுத்தும். இந்திய மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


























