லியோ படத்திற்காக காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பின் சிரமங்கள் குறித்து விளக்கும் ‘A Tribute to The crew behind Leo’ வீடியோ வெளியாகியுள்ளது.
’விக்ரம்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் திரைப்படம் லியோ. தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
’Seven Green Studios’ சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிலோமின் ராஜ் மற்றும் ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா. இரண்டாவது முறையாக விஜயுடன் ’மாஸ்டர்’ படத்திற்குப்பின் லோகேஷ் கனகராஜ் இணையும் படம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு லியோ படத்திற்கு எழுந்துள்ளது.
படம் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியானதுமே, ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கியது. ’விக்ரம்’ படம் போன்றே வித்தியாசமான ஒரு காட்சியமைப்பில் விஜய் தோன்றும் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. மேலும் அதில் இடம்பெற்ற ’Bloody Sweet’ வசனம் வைரலானது.
இந்நிலையில், காஷ்மீரில் ’லியோ’ படப்பிடிப்பில் படக்குழுவினர் எதிர்கொண்ட சிரமங்களை விளக்கும் காணொலி தற்சமயம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பனிப்பிரதேசமான காஷ்மீரில், குளிரை பொருட்படுத்தாமல் படக்குழுவினர் படப்பிடிப்பின் மீது காட்டிய ஆர்வம் மற்றும் அவர்கள் மேற்கொண்ட தியாகங்கள் குறித்து படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி பின்னாலிருந்து இயங்கும் பிற கலைஞர்கள், உதவியாளர்கள், சமையல் கலைஞர்கள் என்று ஒவ்வொருவரும் தத்தமது அனுபவங்களைப் பற்றி இந்தக் காணொலியில் குறிப்பிடுகின்றனர். மேலும் இதன் இறுதியில் தளபதி விஜய் தோன்றும் காட்சிகளும் இடம்பெற்றுன.
’லியோ’ படத்திற்கு பின்னால் நின்று பணிபுரியும் நூற்றுக்கணக்கான கலைஞர்களின் அயராத உழைப்பை பாராட்டும் இந்தக் காணொலிக்கு ‘A Tribute to The crew behind Leo’ என்று பெயரிட்டு படக்குழு இதை வெளியிட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது படப்பிடிப்பிற்கு உதவிய காஷ்மீரைச் சேர்ந்த காவலர்கள், பஹல்காம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளனர். குளிரையும் பொருட்படுத்தாமல் கலைஞர்கள் படப்பிடிப்பிற்காக மேற்கொண்ட சிரத்தைகளை விளக்கும் காணொலி உங்கள் பார்வைக்கு.


























