வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வங்க மொழியில் இதற்குப் ‘பெருங்கடல்’ என்று பொருள்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த 24-ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று காலை 5.30 மணியளவில் அது புயலாக வலுப்பெற்றதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. வரும் நாட்களில் இது தீவிரப் புயலாகவும், பின்னர் அதிதீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 28-ம் தேதி ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும் எனவும், அப்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் காற்றின் வேகம் 140 கிலோமீட்டர் வரை செல்லக்கூடும்.
புயல் ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கரின் சில பகுதிகளில் மிகக் கனமழையையும் அதிதீவிர கனமழையையும் ஏற்படுத்தக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே பகுதிகளுக்கு இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் எனக் கூறி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் அடுத்த இரு நாட்களுக்கு கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புயலால் தமிழகத்துக்கு நேரடி பாதிப்பு இல்லை என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.


















