வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனையில் சலசலப்பு ஏற்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆளும் தவெக முதலில் வெளிநடப்பு செய்ய, மற்ற கட்சிகளும் அடுத்தடுத்து வெளியேறின.
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட 7 மாநிலக் கட்சிகளும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசியக் கட்சிகளும் அழைக்கப்பட்டிருந்தன. தவெகவைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஆகிய அதன் கூட்டணி, ஆதரவுக் கட்சிகள் வெளியேறின. அதன்பிறகு திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும், நாம் தமிழர் கட்சியும், ஆம் ஆத்மியும் வெளிநடப்புச் செய்தன.
கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடைமுறைகள் பின்வருமாறு: 2027 ஜனவரி 1 தகுதி நாளாகக் கொள்ளப்படும். நவம்பர் 2-ல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும்; நவம்பர் 12-ல் வரைவுப் பட்டியல் வெளிவரும். டிசம்பர் 11 வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்த மனு அளிக்கலாம்; டிசம்பர் 28-க்குள் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜனவரி 4-ல் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்ட மூன்று நிலை அலுவலர்களின் அலுவலகங்களில் வேலை நாட்களில் மனு கொடுக்கலாம். வார இறுதிச் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் முகவரிச் சான்றும் வயதுச் சான்றும் அளிக்க வேண்டும்.























